English [en]   العربية [ar]   български [bg]   Deutsch [de]   ελληνικά [el]   español [es]   فارسی [fa]   français [fr]   hrvatski [hr]   italiano [it]   日本語 [ja]   lietuvių [lt]   മലയാളം [ml]   Nederlands [nl]   polski [pl]   português do Brasil [pt-br]   română [ro]   русский [ru]   Shqip [sq]   தமிழ் [ta]   Türkçe [tr]   українська [uk]   简体中文 [zh-cn]  

For thirty years, the Free Software Foundation has been seen as a guiding light for the free software movement, fighting for user freedom.

Help keep our light burning brightly by donating to push us towards our goal of raising $450,000 by January 31st.

$450k
314 k so far

This translation may not reflect the latest changes to the English original. Please see the Translations README for information on maintaining translations of this article.

திறந்த மென்பொருட்கள் ஏன் கட்டற்ற மென்பொருட்களாகா!

ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்

கட்டற்ற மென்பொருள் என்று நாமழைப்பது, மென்பொருட்களை இயக்கவும், கற்று தமக்கேற்றாற் போல் மாற்றம் செய்யவும், அம்மென்பொருளை மாற்றியோ அல்லது மாற்றாதவாரோ விநியோகிக்கவும் கூடிய அடிப்படை உரிமைகளை பயனர்களுக்குத் தர வல்லது. விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்தரத்தினை அடிப்படையாகக் கொண்டது.

தனிப்பட்ட பயனரொருவருக்கானது என்றல்லாது கூட்டுறவோடு கூடிய பகிர்ந்து வாழ வல்ல ஸ்திரமான சமூகத்தினை ஊக்குவிப்பதால் இச்சுதந்தரமானது அத்தியாவசமானதாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகிறது. நம்முடைய கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் டிஜிட்டலாக்கப் பட்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் இதன் மகத்துவம் மேலும் அதிகரிக்கின்றது. ஓசைகள், உருவங்கள், சொற்கள் என அனைத்தும் டிஜிட்டலாகி வருகிற உலகத்தில் கட்டற்ற மென்பொருளை சுதந்திரத்திற்கு நிகராகக் கருத வேண்டியுள்ளது.

கோடிக்கணக்கான மக்கள் இன்று கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். பாரதம் மற்றும் ஸ்பெயினிலுள்ள பகுதிகளில் எல்லா மாணாக்கருக்கும் கட்டற்ற குனு/ லினக்ஸ் இயங்குத் தளத்தின் பயன்பாடுகள் போதிக்கப்படுகின்றன. பெரும்பாலான இந்த பயனர்கள் நாம் எந்த மகோன்னதமான நோக்கங்களுக்காக இந்த அமைப்பினையும் கட்டற்ற மென்பொருள் சமூகத்தினையும் ஏற்படுத்தினோமோ அதனை கேட்டிராதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அமைப்பும் கட்டற்ற மென்பொருள் சமூகமும் இன்று சுதந்தரத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத "திறந்த மூலம்" என்ற வேறொரு தத்துவத்தின் மூலமாக அடையாளங் காணப்படுவது தான் இதற்குக் காரணம்.

கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்தரத்திற்காக கட்டற்ற மென்பொருள் இயக்கமானது 1983 லிருந்து குரல் கொடுத்து வருகிறது. பயனரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984 ல் நாம் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் துவங்கினோம். எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கியதோடு அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்தரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமத்தினையும் இயற்றினோம்.

ஆனால் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தக் கூடிய, உருவாக்கக்கூடிய அனைவருக்கும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் நோக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. இதன் காரணமாக 1998 ம் வருடம் கட்டற்ற மென்பொருள் இயக்கத்திலிருந்து விலகிய சிலர் "திறந்த மூலம்" என்ற பிரச்சாரத்தினைத் துவக்கலானார்கள். முதலில் கட்டற்ற மென்பொருட்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டி முன்மொழியப் பட்ட இவ்வடை மொழியானது பின்னர் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறான நோக்கங்களோடு அடையாளங்காணப்பட்டன.

திறந்த மூல மென்பொருட்களை பிரபலப் படுத்தியோர்களில் சிலர் இதனுள் அடங்கியிருக்கும் சாதக பாதக சிந்தனைகளுக்குச் செவிமடுக்காது வர்த்தக அலுவலர்களுக்கு, நடைமுறை இலாபங்களை எடுத்தியம்பி கவரக்கூடிய, கட்டற்ற மென்பொருட்களுக்கான விளம்பர யுக்தியாக கருதலானார்கள். வேறு சிலரோ கட்டற்றமென்பொருள் இயக்கத்தின் தார்மீக சமூக சிந்தனைகளை அப்படியே புறந்தள்ளினார்கள். அவர்களின் எண்ணமெதுவாக இருந்தாலும் திறந்த மூலத்தினை பிரச்சாரம் செய்யும் போது நமது நற்சிந்தனைகளை மேற்கோள் காட்டவோ எடுத்துச் சொல்லவோ தவறினார்கள். விளைவு "திறந்த மூலம்" என்கிற இப்பதமானது ஸ்திரமான, நம்பகத்தன்மையுடய மென்பொருள் உருவாக்கம் போன்ற நடைமுறை சிந்தனைகளோடு மட்டுமே அடையாளங்காணப் பட்டன. இதனைத் தொடர்ந்து வந்துள்ள எண்ணற்ற திறந்த மூல ஆதரவாளர்களும் இதே சிந்தனையைக் கொண்டு விளங்குகிறார்கள்.

ஏறத்தாழ அனைத்து திறந்த மூல மென்பொருட்களும் கட்டற்ற மென்பொருளே. இரண்டு பதங்களும் கிட்டத் தட்ட ஒரே வகையான மென்பொருட்களையே குறிக்கின்றன. ஆனால் அடிப்படையில் வேறுபட்ட தார்மீக நோக்கங்களைப் பிரதிபலிப்பவை இவை. திறந்த மூலம் மென்பொருள் உருவாக்கத்திற்கான ஒரு வழிமுறை. கட்டற்ற மென்பொருள் ஒரு சமூக இயக்கம். கட்டற்ற மென்பொருள் இயக்கத்திற்கு, கட்டற்ற மென்பொருள் என்பது தார்மீகக் கட்டாயம். ஏனெனில் கட்டற்ற மென்பொருள் மட்டுமே பயனரின் சுதந்தரத்திற்கு மதிப்பளிக்கின்றது. மாறாக திறந்த மூல கொள்கையோ நடைமுறையில் மென்பொருள் உருவாக்கத்தினை செம்மைப் படுத்தும் ரீதியில் பிரச்சனைகளை அணுகுகிறது. அது தனியுரிம மென்பொருட்களை முழுமையில்லாத் தீர்வாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினைப் பொறுத்தவரை தனியுரிம மென்பொருளென்பது ஒரு சமூகப் பிரச்சனை. கட்டற்ற மென்பொருட்களைத் தழுவுவதே இதற்கானத் தீர்வு.

ஒரே மென்பொருளுக்கு கட்டற்ற மென்பொருள், திறந்த மூலம் என்ற இரண்டு பெயருமே பொருந்துமாயின் எப்பெயரை பயன்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றா? ஆம். ஏனெனில் வெவ்வேறு பதங்கள் வெவ்வேறு அர்த்தங்களைப் பிரதிபளிக்கின்றன. வேறொரு அடைமொழியுடன் வழங்கக் கூடிய மென்பொருளொன்று அதே சுதந்திரத்தினை இன்றைய சூழ்நிலையில் தரவல்லதாயினும், மக்களுக்கு சுதந்தரத்தின் மகத்துவத்தை உணர்த்துவதன் மூலமே சுதந்தரத்தினை நீடித்து நிலைக்கச் செய்ய முடியும்.

கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினராகிய நாம் திறந்த மூல சமூகத்தினை எதிரானதாகக் கருதவில்லை. தனியுரிம மென்பொருளையே எதிராகக் கருதுகிறோம். அதே சமயம் நாம் சுதந்திரத்திற்காக குரல் கொடுப்பவர்கள் என்பதை மக்கள் அறிய விழைகிறோம். ஆகையால் திறந்த மூல ஆதரவாளர்கள் என அடையாளங் காணப்படுவதை நாம் ஏற்கவில்லை.

கட்டற்ற மென்பொருக்கும் திறந்த மூல மென்பொருளுக்குமிடையே உள்ள பொதுவான குழப்பங்கள்:

"பிஃரீ சாப்ட்வேர்" என வழங்கும் போது தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடிய பிரச்சனை எழுகின்றது. "நமக்கு கிடைக்கும் மென்பொருள் இலவசமானது" என உண்மையாக நோக்கத்திற்கு புறம்பாக அர்த்தம் கொள்ளப் படுகிறது. இதே பதம் "பயனர்களுக்கு சில சுதந்தரத்தினை வழங்க வல்லது" என்னும் உண்மை நோக்கத்தினையும் பிரதிபலிக்கிறது. இக்குழப்பத்தினை தவிர்க்க "இது பேச்சுரிமை எனும் போது கிடைக்கக் கூடிய சுதந்தரத்தினை போன்றது; இலவச பீர் என்று சொல்லும் போது கிடைக்கக் கூடிய பொருளில் அல்ல" என்ற விளக்கத்துடன் இதனைப் பிரசுரிக்கின்றோம். இது நிரந்திர தீர்வாகாது. இதனால் முழுமையாக இப்பிரச்சனையைக் களைய இயலாது. வேறு பொருளினை ஏற்காத தெளிவான சரியான பதமொன்றே இதற்கு சரியான தீர்வு.

துரதிருஷ்டவசமாக ஆங்கிலத்தில் இதற்கு மாற்றாக நாம் அலசிய பதங்கள் அததற்குரிய குறைபாடுகளுடன் விளங்கின. இந்த பதம் இதற்கு கச்சிதமாய் பொருந்தும் எனும் அளவிற்கு மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளும் திருப்தியாக இல்லை. "திறந்த மூல" மென்பொருட்கள் என்கிற பரிந்துரை உட்பட "கட்டற்ற மென்பொருளுக்காக" பரிந்துரைக்கப் பட்ட சொற்களனைத்தும் உண்மைப் பொருளோடு இசையவில்லை.

திறந்த மென்பொருளின் அதிகாரப் பூர்வ விளக்கமானது (இவ்விடத்தில் சுட்ட இயலாத அளவிற்கு அது நீண்டு இருக்கிறது) நமது கட்டற்ற மென்பொருளின் அடிப்படையில் தருவிக்கப்பட்டது. அது வேறானது. சில விஷயங்களில் இலகுவாகிற காரணத்தினால், எந்த உரிமங்களை பயனரைக் கட்டுப்படுத்துகிற காரணத்தினால் ஏற்றுக் கொள்ள இயலாததாக நாம் கருதுகிறோமோ, அத்தகைய உரிமங்களை திறந்த மூல ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அது நமது விளக்கத்துடன் மிகவும் நெருங்கி நிற்கிறது.

இருந்தாலும், மூல நிரல்களைப் பார்வையிட முடியும் என்பதே திறந்த மூல மென்பொருட்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கமாக விளங்குகிறது. பெரும்பான்மை மக்களும் இதையே அதன் பொருளாகக் கருதுகின்றனர். இது கட்டற்ற மென்பொருட்களின் விளக்கத்தினைக் காட்டிலும் மிகவும் வலுகுறைந்த விளக்கமாகும். ஏன் திறந்த மூல மென்பொருள்களின் விளக்கத்தோடு ஒப்பிடுகையிலும் இது வலுகுறைந்த விளக்கமே. இவை கட்டற்ற மென்பொருட்களிலும் சாராத திறந்த மூல மென்பொருட்களிலும் சாராத பல மென்பொருட்களை உள்ளடக்கியது.

திறந்த மூலம் என்பதன் மெய்ப்பொருளை அதன் உரைஞர்கள் சரியாக எடுத்துரைக்காததால் மக்கள் அதனைத் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். திறந்த மூலத்திற்கான நீல் ஸ்டீபன்ஸனின் விளக்கம் வருமாறு,

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், மூல நிரல்களின் கோப்புகள் கிடைக்கப் பெறுகிற காரணத்தினால் லினக்ஸ் என்பது திறந்த முல மென்பொருளாகும்.

அவர் வலிந்து வந்து திறந்த மென்பொருளுக்கான அதிகாரப் பூர்வ விளக்கத்தினை மறுத்தாகவோ/ மாற்றியுரைத்ததாகவோ நாம் சொல்லவில்லை. ஆங்கிலத்தில் வழக்கத்திலுள்ள சில முறைகளைக் கொண்டு அப்பதத்திற்கு ஒரு விளக்கமளிக்க முன்வந்தார். கன்ஸாஸ் பிரதேசமும் இத்தகைய விளக்கமொன்றினை அளித்தது.

திறந்த மூல மென்பொருட்களைப் பயன்படுத்துங்கள். எந்த மென்பொருட்களின் மூல நிரல்கள் இலவசமாக பொதுமக்களுக்கு கிடைக்கிறதோ அவை திறந்த மென்பொருட்களாகும். ஆயினும் அதைக் கொண்டு ஒருவர் என்ன செய்யலாம் என்பதை அம் மென்பொருட்கள் எந்த உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறதோ அது தீர்மானிக்கும்.

அதிகாரப் பூர்வ விளக்கத்தினை சுட்டி இதனை சரி செய்ய திறந்த மென்பொருள் குழுவினர் முயல்கிறார்கள். நமது பிரச்சனையை களைவதில் நமக்கிருக்கும் சிக்கலைக் காட்டிலும் அது அவர்களுக்கு அதிக சிக்கலுடையதாக உள்ளது. கட்டற்ற மென்பொருளுக்கு இயற்கையாகவே இரண்டு அர்த்தங்களுண்டு. ஒன்று அதன் உண்மைப் பொருள். பேச்சுரிமை என்பதிலுள்ள "பிஃரீ" போன்றது என்பதனை ஒருவர் ஒருமுறை உள்வாங்கிக் கொண்டால் போதும். மறுமுறை தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால் திறந்த மென்பொருள் என்பதற்கு இயற்கையாகவே ஒரு எதிர்மறைப் பொருளுண்டு. இது அதன் ஆதரவாளர்கள் விளக்க முற்படுகிற பொருளுக்கு முரணானது. எனவே திறந்த மென்பொருளின் அதிகாரப் பூர்வ விளக்கத்தினை தெளிவாக விரித்துரைக்க வழியில்லாது போகிறது. இது குழப்பத்தினை மேலும் அதிகரிக்கிறது.

மாறுபட்ட தார்மீகங்கள் ஒத்த முடிவுக்கு வரலாம் என்பது உண்மைதான். ஆனால் எப்போதும் இப்படி இருப்பதில்லை!

1960 களில் உட்குழு பூசல்களுக்கு சில அடிப்படைவாதக் குழுக்கள் புகழ் பெற்றிருந்தன. திட்டமிட்டபடி செயல்படுத்துவதில் இருந்த முரண்பாடுகள் காரணமாக சில ஸ்தாபனங்கள் உடைந்தன. ஒருமித்த தார்மீகங்களையும் லட்சியங்களையும் கொண்ட சோதர அமைப்புகளும் கூட தங்களுக்குள் பகைமை பாராட்டிக் கொண்டன. இடது அணிகளை குறைகூறுவதற்கு இவற்றைப் பயன்படுத்தி இதனை அதிகம் வளர்த்தது வலது அணிகள் தான்.

இவற்றோடு ஒப்பிட்டு சிலர் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினை மட்டம் தட்ட முயற்சி செய்கிறார்கள். திறந்த மென்பொருளாளர்களின் முரண்பாடுகளை இவர்கள் அந்த அடிப்படைவாதக் குழுக்களோடு ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பின்னோக்கி செல்கிறார்கள். நாம் திறந்த மூல ஆதரவாளர்களோடு அடிப்படை தார்மீகங்களிலும் லட்சியங்களிலும் மாறுபடுகின்றோம். ஆனால் அவர்களுடைய எண்ணங்களும் நம்முடையதும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டற்ற மென்பொருள் உருவாக்கம் போன்ற ஒரே நடைமுறை சாத்தியக் கூறுகளுக்கே இட்டுச் செல்கின்றன.

இதன் விளைவு, மென்பொருள் உருவாக்கம் போன்ற பொதுவானத் திட்டங்களில் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினரும் திறந்த மூல மென்பொருள் இயக்கத்தினரும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள். இங்ஙனம் வெவ்வேறு தார்மீகங்களை கொண்டு விளங்குகிற குழுக்கள் பலரதரப்பட்ட மக்களுக்கும் ஊக்கமளித்து ஒரேவிதமான திட்டங்களில் பங்கேற்பது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அணுகுமுறைகள் வேறுபட்டு விளங்குவதால் சில சந்தர்ப்பங்களில் முற்றிலும் மாறுபட்ட செயற்பாடுகளுக்கு இவை இட்டுச் செல்கின்றன.

மென்பொருள்களின் மூல நிரல்களை மாற்றி விநியோகிக்கக் கூடிய உரிமையை பயனர்களுக்கு தருவதின் மூலம் மென்பொருளினை வலுவுடையதாகவும் நம்பகத்தன்மை உடையதாகவும் ஆக்குவதே திறந்த மூலத்தின் அடிப்படை சிந்தனை. தனியுரிம பென்பொருட்களை உருவாக்குபவர்கள் என்ன திறமை குறைந்தவர்களா? சில சந்தர்பங்களில் ஆற்றலும் நம்பகத்தன்மையும் வாய்ந்த மென்பொருட்களை அவர்களும் உருவாக்குகிறார்கள். ஆனால் அவை பயனர்களின் சுதந்தரத்திற்கு மதிப்பளிப்பது இல்லை. இதனை கட்டற்ற மென்பொருளாளர்களும் திறந்த மூல மென்பொருளாளர்களும் எங்ஙனம் எதிர்கொள்வது?

கட்டற்ற மென்பொருள் கொள்கையினால் உந்தப் படாத திறந்த மூல ஆதரவாளரொருவர் "எங்களுடைய உருவாக்க முறையினை கடைபிடிக்காது நீங்கள் இப்பொதியை திறம்பட செயல்பட வைத்த விதம் ஆச்சரியமளிக்கிறது. இதன் பிரதியொன்றினை எப்படி நான் பெறுவது? " எனக் கேட்பார். இத்தகைய அணுகுமுறை சுதந்தரத்திற்கு மதிப்பளிக்காத திட்டங்களை ஊக்குவிப்பதாய் அமைந்து தீமையை விளைவிக்கும்.

கட்டற்ற மென்பொருளாதரவாளரோ "உங்கள் நிரல் வசீகரிக்கக் கூடியதுதான். ஆனால் அதனைப் பயன்படுத்த எனது சுதந்தரத்தினை விலையாய் தரமாட்டேன். இதற்கு மாற்றாக ஒரு கட்டற்ற மென்பொருள் உருவாக்கும் திட்டத்திற்குப் பங்களிப்பேன்." எனப் பகர்வார். நமது சுதந்தரத்திற்கு நாம் மதிப்பளித்தால் தான் அதனைப் பேணிக் காக்க நம்மால் செயல்படமுடியும்.

நோன்றுடைய நம்பகத்தன்மை வாய்ந்த மென்பொருள் தீயதாகவும் இருக்கலாம்

மென்பொருள் நோன்றுடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்கவேண்டும் என்கிற எண்ணம் பயனர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற நினைப்பினால் வருகிறது. நோன்றுடையதாகவும் நம்பகத்தன்மையுடையதாகவும் இருக்கிற மென்பொருள் பயனர்களுக்குச் சேவை செய்ய வல்லதுதான்.

ஆனால் சுதந்தரத்திற்கு மதிப்பளித்தால் மட்டுமே மென்பொருளின் பயனருக்கு சேவையளிக்க உதவுகிறது எனலாம். மென்பொருளின் வடிவமைப்பு பயனரின் மீது கட்டுப்பாடுகளைப் போட்டால் என்ன செய்வது! கட்டறுக்க கடினம் என்பதே நம்பகத்தன்மையின் அர்த்தமாகிப் போய்விடும்!

திரைப்பட மற்றும் ஒலிப்பதிவு நிறுவனங்களின் வற்புறுத்தல்களின் காரணமாக, தனிநபர் உபயோகப்படுதுகின்ற மென்பொருட்கள் அவர்களைக் கட்டுப் படுத்தும் நோக்கில் உருவாக்கப் படுகின்றன. இந்த மட்டமான வசதியை டி.உ.நி என்கிறார்கள். டிஜிட்டல் உரிமை மறுப்பு நிர்வாகம் என்று கூறுவது சரியாக இருக்குமோ? (பார்க்க: DefectiveByDesign.org) இது சுதந்திரத்தை லட்சியமாய்க் கொண்டு கட்டற்ற மென்பொருள் வழங்கும் மாற்றுச் சூத்திரம். இது ஏட்டளவில் என்றில்லை. ஏனெனில் டி.உ.நி யின் குறிக்கோள் உங்களுடைய சுதந்தரத்தை கட்டுப்படுத்துவது. டி.உ.நி யினை உருவாக்குபவர்கள் டி.உ.நி யினை செயல்படுத்துகின்ற மென்பொருட்களை ஒருவரால் மாற்றப்படுவதை கடினமாக, இயலாததாக ஆக்குவதோடு நில்லாமல் சட்டவிரோதமாக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

ஆயினும், சில திறந்த மூல ஆதரவாளர்கள் "திறந்த மூல டி.உ.நி" மென்பொருளை பரிந்துரைச் செய்துள்ளார்கள். உங்களால் அண்ட முடியாத, ஊடகங்களின் உருதிரிக்கப் பட்ட மூல நிரல்களை பதிப்பித்து, பிறரால் அதனை மாற்றும் படி செய்கிற போது நோன்றுடைய, நம்பகத்தன்மையுடைய மென்பொருட்களை உருவாக்க இயலும் என நினைக்கிறார்கள். அதன் பிறகு உங்களால் மாற்ற முடியாத படிக்கு அவை சாதனங்களில் பதியப் பெற்று விநியோகிக்ககப் படும்.

இத்தகைய மென்பொருட்கள் திறந்த மூல உருவாக்க முறையில் செய்யப் பட்ட திறந்த மூல மென்பொருட்களாகலாம். ஆனால் அவை கட்டற்ற மென்பொருட்கள் ஆகா. ஏனெனில் பயனரொருவருக்கு அம்மென்பொருளை இயக்குவதற்கு உள்ள உரிமையை இது மறுக்கிறது. திறந்த மூல உருவாக்க முறையினால் இத்தகைய மென்பொருட்கள் நோன்றுடையதாகவும் நம்பகத் தன்மையுடையதாகவும் ஆகுமானால் விளைவு இன்னும் மோசமாகி விடும். சுதந்தரத்திற்கு ஆபத்து!

சுதந்தரத்தின் மீதான பயம்

திறந்த முல மென்பொருள் என்ற பதம் ஊக்குவிக்கப் பட்டதன் பிரதானக் காரணம் கட்டற்ற மென்பொருட்கள் எடுதியம்புகின்ற தார்மீக சிந்தனைகள் சிலரை சங்கடப் படுத்தியது என்பதே. சுதந்தரம், தர்மம், பொறுப்புணர்ச்சி மற்றும் சவுகரியம் பற்றி பேசுவது என்பது மக்கள் சாதாரணமாக புறந்தள்ளுகிற விஷயங்களான ஒழுக்கம் முதலியவற்றைப் பற்றி சிந்திக்கச் சொல்லுவதாகும். இது உண்மைதான். இது அசவுகரியத்தை தோற்றுவிக்கக்கூடியது. மேலும் மக்களில் சிலர் இவ்விஷயங்களின் பால் கண்மூடித்தனமாக சிந்திக்க மறுத்து விடுவார்கள். இதனால் இவற்றைப் பற்றி பேசுவதை நாம் விட்டு விட வேண்டும் என்பது இல்லை.

ஆனால் இதைத் தான் திறந்த மூல காரண கர்த்தாக்கள் செயல்படுத்த முடிவு செய்தார்கள். தர்மத்தைப் பற்றியும் சுதந்தரத்தைப் பற்றியும் பேசாமல் விட்டுவிடுவதன் மூலமாகவும், சில கட்டற்ற மென்பொருட்களால் நிதர்சனமாய் நடைமுறையில் கிடைக்கக் கூடிய இலாபங்களைக் கணக்கில் கொண்டும், வர்த்தகத்தின் பொருட்டு சில பயனர்களின் மத்தியில் அவற்றை திறம்பட விற்க முடியும் என தீர்வு கொண்டார்கள்.

இவ்வணுகு முறையானது அதன் போக்கிலேயே பயனுள்ளதாய் அமைந்தது எனலாம். பல வர்த்தகங்களையும் தனிநபர்களையும் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கவும் பயன்படுத்தவும் திறந்த மூல சித்தாந்தம் தயார் படுத்தியது. இது நமது சமுதாயம் விரிவடைய உதவியது. ஆனால் இது நடைமுறைக்குகந்த மேம்போக்கான அளவில் மட்டுந்தான். நடைமுறை சிந்தனைகளுடன் கூடிய திறந்த மூலத்தின் சித்தாந்தம் கட்டற்ற மென்பொருட்களின் ஆழ்ந்த சிந்தனைகளைப் புரிந்துக் கொள்ளவதில் தடை ஏற்படுத்துகிறது. பலரை நமது சமூகத்திற்கு கொண்டு வந்தாலும் அவர்களுக்கு சுதந்தரத்தை பேணிக் காக்க அது கற்றுத் தரவில்லை. அது போகிற போக்கில் நலம் பயப்பதாய் இருக்கலாம் அனால் அது சுதந்தரத்தினை காக்க இயலாது உள்ளது. கட்டற்ற மென்பொருட்களின் பால் பயனரை வரவழைப்பது என்பது தங்களின் சுதந்தரத்தினை தாங்களே காத்துக் கொள்கிற அளவிற்கு பயனரை இட்டுச் செல்வதின் துவக்கமே!

மிக விரைவிலேயே இப்பயனர்களுக்கு நடைமுறை இலாபங்களைச் சுட்டிக்காட்டி தனியுரிம மென்பொருட்களைப் பயன்படுத்த மீண்டும் அழைப்பு விடுக்கப் படும். எண்ணற்ற நிறுவனங்கள் இத்தகைய தூண்டிலிட தயாராய் இருக்கின்றனர். சிலர் மென்பொருட்களை இலவசமாகத் தரவும் தயாராய் உள்ளனர். தொழில்நுட்ப மற்றும் நடைமுறை சவுகரியங்களைக் கடந்து கட்டற்ற மென்பொருட்கள் தருகின்ற சுதந்தரத்தினை மதிக்க கற்றுகொண்டாலொழிய பயனர்கள் இவற்றை எப்படி மறுப்பார்கள்? இவ்வெண்ணத்தினைப் பரப்ப நாம் சுதந்தரத்தினைப் பிரச்சாரம் செய்ய வேண்டும். வர்த்தக நோக்கில் சற்றே அடக்கி வாசிப்பது சமூகத்திற்கு நன்மைப் பயப்பதாய் இருக்கலாம். சுதந்தரத்தின் மீதுள்ள பற்றென்பது மையப்பொருளாக இல்லாது போய்விடுமானால் இது மிகவும் ஆபத்தானதாகிவிடும்.

வர்த்தகத்திற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் என்கின்ற காரணத்திற்காக கட்டற்ற மென்பொருட்களோடு தொடர்புடைய பெரும்பாலான மக்கள் சுதந்தரத்தினைப் பற்றிய பேச்சினையே எடுப்பதில்லை. மென்பொருள் விநியோகஸ்தர்கள் இதைப் பற்றி நன்கறிவர். கிட்டத்தட்ட எல்லா குனு/ லினக்ஸ் வெளியீடுகளுமே இயல்பாய் இருக்கக்கூடிய கட்டற்ற மென்பொருட்களோடு தனியுரிம மென்பொருட்களையும் சேர்க்கிறார்கள். சுதந்தரத்தில் இருந்து பின்வாங்குகின்றோம் என்பதை விடுத்து, இதனைச் சாதகமானதாய் கருதச் சொல்லி பயனர்களை வரவேற்கிறார்கள்.

நமது சமூகம் மென்பொருளோடு கூடிய சுதந்தரத்தினை வலியுறுத்தாததால் தனியுரிம கூடுதல் மென்பொருட்களும் அரைகுறை குனு/ லினக்ஸ் வழங்கல்களும் வலுவான அடித்தளம் அமைத்துக் கொள்கின்றன. இது தற்செயலானது அல்ல. சுதந்திரம் தான் இலட்சியம் என்பதை வலியுறுத்தாத, "திறந்த மூலம்" என்கிற வாதத்தின் மூலம் பெரும்பாலான குனு/ லினக்ஸ் பயனர்களுக்கு இம்முறை அறிமுகப்படுத்தப்படுகின்றது. சுதந்தரத்தைப் பேணிக்காக்காத பழக்கவழக்கங்களும் சுதந்தரத்தைப் பற்றி பேசாத வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று துணைப் போகின்றன. இவை பரஸ்பரம் ஒன்றை மற்றொன்று வளர்க்க உதவுகிறது. இந்த இயல்பினை மாற்ற, சுதந்தரத்திற்காக, அடக்கி வாசிக்காது இன்னும் அதிகமாக நாம் குரல் கொடுக்க வேண்டும்.

நிறைவுரை

திறந்த மூல வாதத்தினர் நமது சமூகத்திற்கு அதிக பயனர்களை ஈட்டித் தருகின்ற இத்தருணத்தில், கட்டற்ற மென்பொருள் ஆதரவாளர்களாகிய நாம் இத்தகைய புதிய பயனர்களின் கவனத்திற்கு சுதந்தரத்தினை எடுத்தச் செல்ல மேலும் முயற்சி செய்ய வேண்டும். "இது கட்டற்ற மென்பொருளாகையால் உனக்கு சுதந்தரத்தினைத் தரவல்லது!" என்பதை முன்னெப்பொழுதையும் விட உரக்கமாக நாம் எடுத்தியம்ப வேண்டும். "திறந்த மூலம்" என்பதற்கு மாற்றாக "கட்டற்ற மென்பொருள்" என்று கூறுகிற ஒவ்வொருதடவையும் நீங்கள் எங்களுடைய பிரச்சாரத்திற்கு தோள் கொடுக்கிறீர்கள்.

பின்குறிப்புகள்

கட்டற்ற மென்பொருள் உருவாக்குபவர்களுக்கு ஊக்கமளிக்கும் லகனி மற்றும் உல்பிஃனுடைய அறிக்கையானது மென்பொருள் கட்டற்று இருக்க வேண்டும் என்பதனால் கணிசமானோர் ஊக்கம் பெற்றிருப்பதாக தெரிவிக்கின்றது. இந்த தார்மீகத்திற்கு முக்கியத்துவம் அளிக்காத இணைய தளமான சோர்ஸ்போர்ஜின் நிரலாலர்களை கருத்தில் கொண்டும் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டது.

 [FSF logo] “Our mission is to preserve, protect and promote the freedom to use, study, copy, modify, and redistribute computer software, and to defend the rights of Free Software users.”

The Free Software Foundation is the principal organizational sponsor of the GNU Operating System. Support GNU and the FSF by buying manuals and gear, joining the FSF as an associate member, or making a donation, either directly to the FSF or via Flattr.

back to top